Menu

நாகூர் ஸ்பெஷல் வாடா


தேவையான பொருட்கள்:
  1. 1 கப் மீந்த சோறு (பழைய சோறு)
  2. 1/2 கப் ரவை
  3. 3/4 கப் பச்சரிசி
  4. 1/2 தேக்கரண்டி சோடா உப்பு
  5. 1/4 கப் இறால்
  6. 10 சிறியவெங்காயம்
  7. 2 பெரிய வெங்காயம்
  8. 5 பச்சை மிளகாய்
  9. 1/4 கப் துருவிய தேங்காய்
  10. தேவைக்கு உப்பு
  11. எண்ணெய் - பொறிக்க
செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் பழைய சோற்றை எடுத்து நன்றாக நீர் வடித்து, அதில் சோடா உப்பும், ரவையும் சேர்த்து நன்றாக பிசைந்து 5-6 மணி நேரம் வைக்க வேண்டும் (நொதிப்பதற்காக). (நன்றாக தண்ணீரை வடிப்பது அவசியம். பிசைந்த பின் மாவு கெட்டியாக இருக்க வேண்டும்)
2. பிறகு விரலை விட்டுப் பார்த்தால் பொதுக் என்று உள்ளே போகும். லேசாக பிசுபிசுப்பாக இருக்கும்.இது தான் சரியான பதம்.
 

3. ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் இறால் சேர்த்து லேசாக வதக்கி பிறகு சிறிய வெங்காயம், பாதி தேங்காய்த் துருவல், 2 பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வேக விடவும்.

4. நொதித்த சோற்றுக் கலவையில் கொரகொரப்பாக பொடித்து வைத்துள்ள பச்சரிசி (ரவை போல பொடிக்கவும்), தயாரித்து வைத்துள்ள இறால் மசாலா சேர்த்து நன்றாக பிசைந்து 1/2 மணி நேரம் வைக்கவும்

5. ஒரு பிளாஸ்டிக் கவர் எடுத்து அதன் மீது கொஞ்சம் தண்ணீர் தெளித்து கொள்ளவும். கையிலும் சிறிது தண்ணீர் தொட்டு விட்டு ஒரு தக்காளி அளவு கலவையை எடுத்து பிளாஸ்டிக் கவர் மீது வைத்து தட்டவும். நடுவில் பெரிய ஓட்டை விரலை வைத்து அமைக்கவும். வாடாவின் மீது ஒரு இறாலை வைத்து அழுத்தி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
சுவையான நாகூர் ஸ்பெஷல் வாடா தயார்... இது நோன்பு காலங்களில் மிகவும் பிரபலம்
தொட்டுக் கொள்ள:
2 பெரிய வெங்காயம் மற்றும் 2 பச்சை மிளகாய் நறுக்கி அதனுடன் பாதி தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 2-3 நிமிடம் ஸ்டீமரில் வைத்து அவித்து எடுத்தால் வாடாவிற்கு ஏற்ற சுவையான சைட்டிஷ் தயார்
*******************************************************************************************************************
நாகை மாவட்டம் நாகூர் மற்றும் காரைக்காலின் பாரம்பரிய ஸ்னாக்ஸ் வகைகளுள் இது முக்கியமானது... பழைய சோறு கொண்டு செய்யப்படும் இந்த வாடா தனித்துவமான சுவையுடன் மொறுமொறுபாக இருக்கும்.... மாலை நேரத்தில கடற்கரையில் சுடச்சுட விற்கப்படும் மொறு மொறு இறால் வாடாவை யாராலும் சாப்பிடாமல் கடந்து செல்ல முடியாது!!

No comments:

Post a Comment

Comments system