Menu

வேப்பிலை எண்ணெய்



நம் உடலில் முக்கியாமாய் நாம் கருதும், அதிக முக்கியத்துவம் தரும் ஒரு உறுப்பு என்றால் அது நம் தோல் என்றே கூறலாம் ! ஆம், பண்டைய காலம் தொட்டு இன்று வரை சரும பராமரிப்பு நம் அன்றாட வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இயற்கையோ, செயற்கையோ நம் சருமம் எவ்வித மாசு மருவுமின்றி மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருந்தால் போதுமென்று பல பொருட்களை பயன்படுத்துகிறோம் நாம்.

ஆனால் சருமப் பிரச்சினைகள் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, முகத்தில் பருக்கள், வியர்க்குருக்கள், உடலில் நுண்ணுயிர்த் தொற்று, வெயிலினால் உண்டாகும் எரிச்சல், கட்டி, ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய தடிப்பு, புண் , கொசுக்கடியால் ஏற்படும் புண்கள் இப்படி பல....... ஆனால் அனைத்தின் முடிவும் ஒன்று தான் - நம் சருமத்தில் தழும்புகளாக பதிந்து விடுகின்றன... 

இப்படி அனைத்து விதமான சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கும் ஏற்ற ஒரு முறை தான் நான் இன்று பதிவிடும் இந்த " அதிசய வேப்பிலை எண்ணெய்" - பெயருக்கேற்றார் போல் இது உங்கள் சருமத்தில் பல அதிசயங்கள் புரியும். இதோ அதன் செய்முறை :

தேவையான பொருட்கள் :

1. சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய் - 1 கப்
2. பசுமையான இளம் வேப்பிலை - ஒரு கைப்பிடி
3. கஸ்தூரி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
4. அதிமதுரத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

1. முதலில் வேப்பிலைகளை சிறு உலக்கையில் தட்டிக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் தட்டி வைத்த வேப்பிலைகளை போட்டு , மஞ்சள் தூள் மற்றும் அதிமதுரத்தூள் போட்டு மிகக்குறைந்த தீயில் வைக்கவும் (எண்ணெய் கொதிக்கக் கூடாது)
3. சிறிது சிறிதாக சூடாகி எண்ணெயில் உள்ள வேப்பிலைகள் மொறு மொறுப்பான பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும் 
4. சூடு ஆறிய பின்னர் வடிக்ட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்

உபயோகிக்கும் முறை:

குளிப்பதற்கு 30 முதல் 45 நிமிடங்கள் முன்னர் இந்த எண்ணெயை தடவி நன்றாக மேல்நோக்கி மசாஜ் செய்யவும் (10 நிமிடங்கள் )
அல்லது, இரவு உறங்கும் முன்னர் எண்ணெய் தடவி காலை எழுந்ததும் குளிக்கவும்



பயன்கள்:

வேப்பிலை நல்ல கிருமிநாசினி. அதுமட்டுமல்லாது கொசுக்கடியிலிருந்து உங்களைக் காப்பாற்றும் (எனவே இரவு எண்ணெய் தடவிவிட்டு தூங்குவது மிகவும் சிறப்பு)

மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி, பருக்களை போக்கும், சருமத்திற்கு பொலிவு தரும்

அதிமதுரத்தூள் சருமத்தின் நிறம் மேம்பட உதவும். கருந்திட்டுக்களை மெல்ல நீக்கும்.

இதை தொடர்ந்து உபயோகித்தால் சருமம் சீராகும். தழும்புகள் மறையும் (நாள்பட்ட தழும்புகள் மறைவதற்கு அதிக நாட்களாகும்)



No comments:

Post a Comment

Comments system