Menu

நன்றாக அருந்துங்கள் -- தண்ணீரைத்தான் !! (நீர் அருந்த சில வழிமுறைகள்)


நீரின்றி அமையாது உலகு !! மெய்தான்....
நம் உடலின் அனைத்து செயல்பாடுகளும் செவ்வையாக நடைபெற நீர் இன்றியமையாத பங்கு வகிக்கிறது ! ஒருவருக்கு தேவயான நீரின் அளவு வேண்டுமானால் அவரின் வயது, உடல் அமைப்பு, வாழும் இடம், தட்பவெப்ப நிலை போன்றவற்றால் மாறுபடுமே தவிர, உடலின் சீரான இயக்கத்திற்கு - இரத்த ஓட்டத்தை சீராக்க, உடலின் கழிவுகளை சிறுநீர் வியர்வை மூலம் வெளியாக்க, என அனைத்திற்கும் நீர் மிகவும் அவசியம்.

அதெல்லாம் சரி , எங்களுக்குத் தெரியும்......தண்ணி குடி தண்ணி குடினா என்ன பண்றது ??? சப்புன்னு இருக்கே !!! போர் அடிக்குதுனு நீங்க சொல்றது காதில் விழுது.....அதுக்கான சில டிப்ஸ் தான் இந்த கட்டுரை.

விரும்பி தண்ணீர் குடிக்க சில வழிகள் :
1. தண்ணீர் பாட்டில் அல்லது ஜக்கில் உங்களுக்கு பிடித்த பழங்களை துண்டுகளாக்கி போட்டு வையுங்கள். உதாரணமாக, எலுமிச்சை, ஆரஞ்ச், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, கிவி - இப்படி உங்களுக்கு பிடித்தவை. தண்ணீருக்கு சுவை தருவதோடு புத்துணர்வும் அளிக்கும்

2.  பழங்கள் மட்டும் தான் போடணும்னு இல்லை... நல்ல புத்துணர்வு தரக்கூடிய புதினா இலைகள் அல்லது கொஞ்சம் துளசியோ , ரோஸ்மேரியோ ...அட அது கூட வேண்டாம்ங்க, இஞ்சி ஒரு துண்டு கூட போட்டு வைக்கலாம்

3. இந்த வரிசையில் முக்கியமா நம்மூர் டிப்ஸ் ஒன்று கண்டிப்பா சொல்லியே ஆகணும்.. அதுதாங்க சீரகத் தண்ணீர் ; சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தான் அருந்த வேடுமென்றில்லை! கொஞ்சம் சீரகத்தை தண்ணீர் பானையில் போட்டு வைத்தாலே போதுமானது! உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளும் தண்ணீர் இப்படி இருந்தால் ரொம்ப நல்லது. உணவு செரிமானத்தில் பெரும் பங்கு உண்டு இதற்கு!

4. அடுத்து நான் சொல்லப் போகும் முறை எல்லோருக்கும் ரொம்பவே பிடித்த முறை! உங்களுக்கு பிடித்த பழங்களை சிறு துண்டுகளாக்கி ஐஸ் ட்ரேயில் போட்டு நீர் ஊற்றி உறைய வையுங்கள்.. தண்ணீர் குடிக்கும் சமயம், 2 அல்லது 3 ஐஸ் கட்டிகளை எடுத்துப் போட்டு குடித்தால் சில்லுன்னு புத்துணர்வாய் இருக்கும்.

இப்படி எந்த முறையிலும் உங்களுக்கு தண்ணீர் குடிக்க பிடிக்கவில்லையா?? கவலையை விடுங்கள்!! குடிக்க பிடிக்கலைனா தண்ணீரை சாப்பிடலாம்....அதாவது நீர் சத்து அதிகமுள்ள காய்கனி வகைகளை சாப்பிடலாம். தர்பூசணி, முள்ளங்கி போல..


இப்பொழுது தண்ணீர் அருந்தும் வழிமுறை பற்றி பார்க்கலாம்!
முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் - தண்ணீரை வாய் வைத்துக் குடியுங்கள். அதுவும் நிறுத்தி நிதானமாக பொறுமையாக ! ஒரு மிடறு தண்ணீர் குடித்தால் அதை வாயில் வைத்து எச்சிலுடன் கலந்த பின் மெதுவாக தொண்டையில் இறக்குங்கள்.. முக்கியமாக, அண்ணாந்து குடிக்கக்கூடாது! மற்றவர் குடிக்கவேண்டுமென்றால் தனியே குவளை வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சுக் குழாய், உணவுக்குழாய் என அடுத்தடுத்து ஒன்றாக இருப்பதால், இப்படி வாய் வைத்து பொறுமையாய் குடிப்பதே சிறந்தது.

தண்ணீர் போதுமான அளவு குடிக்காவிட்டால் என்ன நடக்கும் ???

1. உடல் சோர்வடையும், உடல் எடை குறைவு மற்றும் சத்துக் குறைவும் ஏற்படும்
2. நா வறட்சி ஏற்படும்
3. சிறுநீர் அடர்நிறமாக மாறும். சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பும் அதிகம்
4. மயக்கம் ஏற்படும்

இறுதியாக நான் சொல்ல விரும்புவது - உங்களால் போதிய அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள இயலவில்லையெனில் சில புதிய யுக்திகளை கையாளலாம். உங்கள் அலைபேசியில் நீர் அருந்தும் இடைவெளிக்கேற்ப அலார்ம் வைப்பது; எப்பொழுதும் தண்ணீர் பானை மற்றும் பாட்டில்களை நிரப்பி வைப்பது; உங்கள் கைப்பை, கார் போன்று நாலைந்து இடங்களில் தண்ணீர் பாட்டில்கள் வைத்துக் கொள்வது ..இன்னும் இது போல!!


படங்கள்: கூகிள்

No comments:

Post a Comment

Comments system